சென்னை: திராவிட மாடல் அரசு, எல்லா வகையிலும் பெண்களுடைய முன்னேற்றத்துக்காக தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
ஒருமுறை பெரியாரிடம் பெண்களுக்கு உரிமை கொடுக்கணும்னு சொல்றீங்களே, அவங்களுக்கு என்னென்ன உரிமை கொடுக்கணும்னு கேட்டாங்க.
அதுக்கு பெரியார் கொஞ்சம் கூட யோசிக்காம சொன்ன பதில், ‘ஒரு ஆணுக்கு என்னெல்லாம் உரிமை இருக்கின்றதோ அந்த உரிமையெல்லாம் பெண்ணுக்கும் இருக்கணும்னு’ சொன்னார். அது தான் உண்மையான பெண்ணுரிமை. இதுதான் நம்முடைய திராவிட இயக்கத்தோட கொள்கை. அதனால தான், திமுக ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் தொடர்ந்து திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது.
இந்த திராவிட மாடல் அரசு, எல்லா வகையிலும் பெண்களுடைய முன்னேற்றத்துக்காக தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஆட்சிக்கு வந்ததும் அவர் போட்ட முதல் கையெழுத்தே, பெண்களுக்கான கையெழுத்து. அதுதான் மகளிருக்கான விடியல் பயணம் திட்டம். அடுத்ததாக அரசு பள்ளியில் படிக்கக் கூடிய மாணவிகள் உயர்கல்வி படிக்க சேர்ந்தால், அவங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுக்கின்ற புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைக்கு இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கின்ற வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுத்து கொண்டு இருக்கிறார் முதல்வர்.
இந்த வரிசையில் தான், இன்றைக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் ரூ.3000 கோடி வங்கிக்கடன் இணைப்புகளை முதல்வர் வழங்க இருக்கிறார். கடந்த 4 வருஷத்துல மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கிறது.
நீங்கள், உங்களுடைய பொருளாதாரத்துக்காக குடும்பத்துல இருக்கிறவங்களை எதிர்பார்த்து இருக்கக் கூடாதுன்னு தான் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மகளிர் கேட்கின்ற அத்தனை திட்டங்களையும் முதல்வர் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இனியும் நீங்கள் கேட்க போகின்ற திட்டங்களையும் கண்டிப்பாக நிறைவேற்றி தருவார். அதே மாதிரி இந்த அரசுக்கும், முதல்வருக்கும் நீங்கள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post திமுக ஆட்சியில் எல்லா வகையிலும் பெண்கள் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து முன்னுரிமை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.