சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மானாமதுரை எம்எல்ஏ அ.தமிழரசி (திமுக) பேசுகையில், “பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் முருகன் மாநாடு நடத்தி பக்தர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டது போல, சமத்துவம் பேணுகின்ற தாய் உள்ளம் கொண்ட முதலமைச்சரின் ஆட்சியில் சக்தி மாநாடு நடத்தி சமத்துவம் பேணப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு சக்திகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள் என்பதை நம்முடைய உறுப்பினர் நன்றாக அறிவார். தீபஒளி ஏற்றுகின்ற பௌர்ணமி திருவிளக்கு பூஜை இன்றைக்கு 20 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு இதுவரையில் 58,600 பக்தர்கள் பலன் அடைந்திருக்கின்றார்கள். அதே போல் கடந்த ஆண்டு ஆன்மீகப் பயணத்தை ஏற்படுத்தி 1,031 சக்திகள் அந்த ஆன்மிக பயணத்திலும் பயனடைந்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 60,000 சக்திகள் பயனடைந்து இருப்பதால் சக்தி மாநாடு என்று ஒன்று தனியாக தேவைப்படவில்லை” என்றார்.
* இந்தியாவில் காசநோய் கண்டறிவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி (திமுக) பேசுகையில், “பூந்தமல்லி தொகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இரு மருத்துவர்களே உள்ளனர். செவிலியர்கள் இல்லை. புதிய கட்டிடம் வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதிவரை தமிழ்நாட்டில் புதியதாக காசநோய் இருப்பவர்களைக் கண்டறிவதற்குரிய ஒரு ஸ்கீரின் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு அதில் இதுவரை 7,55,660 நபர்களிடத்தில் ஸ்கீரின் செய்யப்பட்டு 21,768 பேர் புதியதாக காசநோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். இதற்காக இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலங்களிலும் காசநோய் கண்டறிவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது என்று சொல்லி, கடந்த வாரம் 24ம் தேதி ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவால் தமிழ்நாடு அரசுக்கு ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது. என்றார்.
* சட்டப்பேரவையில் இன்று…
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிப்பார். அதைத்தொடர்ந்து வனத்துறை, சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பதில் அளித்து பேசி, துறைக்கான அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
* சட்டசபையில் பாட்டுப் பாடிய திமுக எம்எல்ஏ அவையில் சிரிப்பலை
சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி (அதிமுக) பேசும் போதும் ஒரு பாட்டு பாடினார். அந்த பாட்டு இந்த இடத்திற்கு பொருத்தம் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.
எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் (திமுக) பேசுகையில், நான் ஒரு பாட்டு பாடுகிறேன். தமிழ்நாட்டினுடைய பொருளாதாரக் குறியீட்டையே உயர்த்திக் காட்டிய பாடல். சேத்த பணத்த சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு. உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு. அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு என்று கவிஞர் மருதகாசி பாடல் இயற்றினார். நான் எம்.ஜி.ஆர். பாடினார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
The post திமுக ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.