சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சுவிட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் 2025ம் ஆண்டுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் கலந்துகொண்டிருக்கிறார். மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு மாநிலங்கள் பெருமளவு முதலீட்டை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்திட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழில் துறை அமைச்சரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
ஆனால், தமிழ் நாட்டிற்கு எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடு எவ்வளவு என்று வெள்ளை அறிக்கை கேட்ட மு.க.ஸ்டாலின், கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில், ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்றும், தற்போது, டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு? உண்மையில் இதுவரை பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது பற்றியும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.