சென்னை: “வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக நடத்தப்பட்ட திமுக செயற்குழு, பாஜகவுக்கு எதிரான செயற்குழுவாக நடந்து முடிந்திருக்கிறது. இதன் மூலம் வரும் 2026 தேர்தலில், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்பதை திமுக மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களம், ‘திமுக Vs பாஜக ’ என்று மாறிவிட்டதை பிரதிபலிக்கும் விதமாகவே திமுக செயற்குழுவில் பேசியவர்களின் பேச்சுக்கள் அமைந்திருந்தன” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக செயற்குழு கூட்டம் நேற்று (டிச.22) நடந்து முடிந்துள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் திமுக நடத்தும் சடங்குதான் இது. ஒவ்வொரு செயற்குழுவைப் போல, இந்த செயற்குழுவும், முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை புகழ் பாடும் கூட்டமாகவே நடந்து முடிந்திருக்கிறது. கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம்” என்றும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “200 இடங்களுக்கு மேல் வெல்வோம்” என்றும் கூறியிருக்கின்றார். இவர்கள் திமுகவின் 75 ஆண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்.