சென்னை : திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க. செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இதுவரை 2,504 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகளுக்கு மேலான 49 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் 3,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதுவரை ரூ.7,154 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் சொத்து மீட்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் பாஜக போராட்டம் நடத்தியது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க. செயல்படுகிறது. அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது. திருப்பரங்குன்ற விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையோடு இருக்கின்றனர்.
ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இனத்தால், மதத்தால், மொழியால் பிரச்சினையை ஏற்படுத்துவதே எச்.ராஜாவின் நோக்கம். ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியது அழகல்ல. திராவிட மண்ணில் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். திருப்பரங்குன்றத்தில் தைப்பூச வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வரிடம் அனுமதி பெற்று திருப்பரங்குன்றம் சென்று விரைவில் ஆய்வு செய்யவுள்ளேன்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post “திராவிட மண்ணில் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” :அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம் appeared first on Dinakaran.