தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருபவை திமுக மற்றும் அதிமுக எனும் திராவிடக் கட்சிகளே. நீதிக்கட்சி மற்றும் பெரியாரின் திராவிடர் கழகம் ஆகியவற்றிலிருந்து இந்த கட்சிகள் தங்களின் வேர்களைக் கொண்டுள்ளன. 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றது. அன்று முதல் இன்றுவரை திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆளுகையிலேயே தமிழ்நாடு உள்ளது.
திராவிடர் கழகத்தில் அண்ணா செயல்பட்டுவந்த காலத்தில், பெரியார் – அண்ணா இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திமுக உருவானது, அன்றைக்கு இருந்த அரசியல் சூழ்நிலைகள் பற்றியெல்லாம் இன்றைய தலைமுறைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேநேரம் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆராயும்போது திராவிட இயக்கங்களின் பங்களிப்பு பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் தேர்தல் அரசியலில் ஈடுபடாத திராவிடர் கழகத்தில் இருந்து, திமுக உருவான வரலாறு குறித்து சுருக்கமாகக் காண்போம்.