களக்காடு : திருக்குறுங்குடியில் சிதிலமடைந்த சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் இருந்து பணகுடி செல்லும் சாலை இருவழி சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாபநாசம், சேரன்மகாதேவி, தென்காசி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவிலுக்கு கார்களில் செல்லும் பயணிகள் திருக்குறுங்குடியில் இருந்து பணகுடி சாலையில் ராஜபுதூர், ரோஸ்மியாபுரம் வழியாக சென்று வருகின்றனர்.
இதுபோல லாரிகள் மற்றும் கனரக வாகனங்களும் இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றன. அடிக்கடி வாகனங்கள் செல்வதால் இந்த சாலை எப்போதும் பிசியாகவே காணப்படுவது வழக்கம். இந்நிலையில் திருக்குறுங்குடி-பணகுடி சாலையில் திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் இருந்து ராஜபுதூர் வரையிலான ரோடு பழுதடைந்து காட்சியளிக்கிறது.
சாலையில் ஆங்காங்கே குண்டு-குழிகள் ஏற்பட்டுள்ளது. கற்களாகவும் பெயர்ந்து கிடக்கிறது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை குளம் போல் மாறி விடுகிறது. அத்துடன் சகதிமயமாகவும் காணப்படுகிறது. பழுதடைந்த சாலையில் வாகனங்கள் சிக்கி திணறுகின்றன. அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை பழுதடைந்து கிடப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். எனவே சிதிலமடைந்து கிடக்கும் திருக்குறுங்குடி-பணகுடி சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருக்குறுங்குடியில் சிதிலமடைந்த சாலையால் அடிக்கடி விபத்து appeared first on Dinakaran.