சென்னை: திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, கோவிலூர், அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில் சார்பில் நடத்தப்பட்டு வரும் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரவுக்காவலராக பணியாற்றி வந்த லெ.மருதமுத்துசாமி என்பவர் பணியில் இருக்கும் போதே உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகளாகிய திருமதி ம.வெங்கடேஸ்வரி அவர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் பள்ளிக்கல்வித்துறைக்கு முன்மொழியப்பட்டு உரிய ஆணைகள் பெறப்பட்டன.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், பணிக் காலத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரர் ம. வெங்கடேஸ்வரி அவர்களுக்கு கருணை அடிப்படையில் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப் பள்ளி அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (சட்டம்) கொ.செ.மங்கையர்க்கரசி, திருவாரூர் மாவட்ட உதவி ஆணையர் வி.சொரிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியை க.மாலினி ஆகியோர் உள்ளனர்.
The post திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு!! appeared first on Dinakaran.