திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே காதல் கணவனை தன்னோடு சேர்த்து வைக்க கோரி, கணவன் வீட்டு முன்பு பொறியியல் பட்டதாரி மாணவி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி.
இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார். அதே கல்லூரியில், எம்பிஏ பட்டதாரியான திருவெறும்பூர் கணேசபுரத்தை சேர்ந்த பாபுராஜ் என்பவரை காதலித்துள்ளார்.
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பொன்மலையில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு இருதரப்பு பெற்றோர் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பாபுராஜின் பெற்றோர் மகனை ஏற்க மறுத்ததாகவும், திருமண வாழ்க்கையில் எந்த தலையீடும் செய்யமாட்டோம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாகவும், அதே போல் ரேவதி பெற்றோர் இவர்களை ஏற்று கொண்டதாவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தஞ்சாவூரில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற பாபுராஜ், ரேவதியுடன் போனில் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்துள்ளார் எனவும், நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறிவிட்டு செல்போனை ஸ்விட் ஆப் செய்ததாக ரேவதி தெரிவித்தார்.
அதன் பிறகு பாபுராஜை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் பாபுராஜ் மீது ரேவதி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் அவரை வரவழைத்து விசாரணை நடத்தி தாலி கட்டி விட்டு பெண்ணை ஏமாற்றியதாக பாபுராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் பாபுராஜின் பெற்றோர் அவரை பிணையில் எடுத்துள்ளனர். இதையறிந்த ரேவதி, கணவன் பாபுராஜ் வீட்டிற்கு சென்று, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுகொண்டார். சிறைக்கு அனுப்பியதால், விவகாரத்து செய்ய போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை பாபுராஜ் வீட்டு முன் தர்ணா போராட்டத்தை துவங்கினார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் ரேவதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போலீசார் சமாதானத்தையடுத்து போராட்டத்தை கைவிட்டு, வீட்டிற்கு சென்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post திருச்சி அருகே சேர்ந்து வாழ மறுக்கும் காதல் கணவர் வீட்டு முன் இளம்பெண் தர்ணாவால் பரபரப்பு appeared first on Dinakaran.