திருச்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (05.12.2024) திருச்சி மாவட்டத்தில் 4 திருக்கோயில்களில் ரூ.22.60 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, ரூ.1.30 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 12 கிலோ 595 கிராம் பொன் இனங்களைச் சுத்தத் தங்கமாக மாற்றி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் அவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (05.12.2024), திருச்சி மாவட்டம், குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் உபயதாரர் நிதியின் மூலம் ரூ.7.58 கோடி மதிப்பீட்டில் பிரகார மண்டபம், ரூ.5.19 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் புதுப்பித்தல், ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக இரண்டு ஐந்து நிலை இராஜகோபுரங்கள், ஒரு மூன்று நிலை இராஜகோபுரம் கட்டுதல் மற்றும் இராஜகோபுர அடித்தள பணிகள், ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் கருட மண்டபம் கட்டுதல் மற்றும் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டிலான இதர பணிகள் உள்பட ரூ.22 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, ரூ.26.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பசு மடத்தினை திறந்து வைத்தார். மேலும், இத்திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்குப் பயன்படுத்த இயலாத 12 கிலோ 595 கிராம் பொன் இனங்களைச் சுத்தத் தங்கமாக மாற்றி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி திருச்சி மண்டல மேலாளர் அவர்களிடம் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திருப்பைஞ்ஞீலி, அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வாகன மண்டப திருப்பணியை தொடங்கி வைத்து, ரூ.42 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர், மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் யானை லட்சுமிக்கு ரூ.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள யானை குளியல் தொட்டியினையும், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.11.30 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள நெற்களஞ்சியத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில் மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) கே.ரவிச்சந்திரபாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆப., இணை ஆணையர்கள் சி.கல்யாணி, இரா.வான்மதி, சி.மாரியப்பன், எ.ஆர்.பிரகாஷ், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் மதன், உதவி ஆணையர்கள் எம்.லட்சுமணன், வி.சுரேஷ், ஜி.உமா, டி.அனிதா, மலைக்கோட்டை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஐயப்பன், குணசீலம் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் கே.ஆர்.பிச்சுமணி ஐயங்கார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருச்சி மாவட்டத்தில் 4 கோயில்களில் ரூ.22.60 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.