திருச்செந்தூர்: முருகப்பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நாளை (7ம் தேதி) காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது. இதை முன்னிட்டு சுவாமி சண்முகருக்கு ராஜகோபுர வாசல் அருகில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதர் 5, நடராஜர் 5, பெருமாள் 5 மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு 12 என மொத்தம் 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறுகிறது.
இதையொட்டி, கடந்த 1ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடந்து வருகின்றன.நேற்று காலை 8வது கால யாக சாலை பூஜையும், மாலை 9வது கால யாக சாலை பூஜையும் விமரிசையாக நடந்தது. இதையொட்டி கோயில் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து ஆச்சார்ய விசேஷ சந்தி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஆச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது. அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
யாகசாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசையும், பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 108 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடந்தது. சிகர நிகழ்ச்சியாக நாளை (ஜூலை 7ம் தேதி) காலை 6.15 மணி முதல் 6.50 மணி குடமுழுக்கு நன்னீராட்டு தமிழிலும் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தற்போதே திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்காக 600 சிறப்பு பஸ்கள், சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
The post திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு: பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.