திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த நவ. 18ம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினரான சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். கடந்த மாதம் 24ம் தேதி யானை பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். சிசுபாலன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த 2ம் தேதி அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், பாகன் உதயகுமார், சிசுபாலன் குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கினார்.
இந்நிலையில் நேற்று (7ம் தேதி) காலை திருச்செந்தூர் வஉசி தெருவில் உள்ள பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற கனிமொழி எம்பி, பாகனின் மனைவி ரம்யா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தக்காரின் செயல்முறை ஆணை வாயிலாக ரம்யாவுக்கு கருணை அடிப்படையில் கோயிலில் அலுவலக உதவியாளர் பணி வழங்குவதற்கான நியமன ஆணையை வழங்கினார். பாகனின் மகள் கல்விச் செலவு முழுவதையும் ஏற்பதாக தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகன் மனைவிக்கு அரசு பணி appeared first on Dinakaran.