எட்டயபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அய்யன்தோட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (38), பனியன் மொத்த வியாபாரி. இவர், நண்பர்கள் தாராபுரம் விவசாயி விஜயகுமார் (38), அலங்கியம் இன்ஜினியர் விக்னேஷ்(31), பழநி மகேஷ்குமார் (35), ராஜ்குமார்(35) ஆகியோர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்துள்ளனர். கடந்த 23ம் தேதி 5 பேரும் காரில் பழநி உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் திருச்செந்தூர் சென்றனர். முருகன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு நேற்று காலை திருப்பூருக்கு புறப்பட்டனர். காரை செல்வராஜ் ஓட்டினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த மேலக்கரந்தை அருகே சென்ற போது செல்வராஜிக்கு தூக்கம் வந்ததால் காரை ஓரமாக நிறுத்தி ஓய்வு எடுத்துள்ளார்.
அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கார் பள்ளத்தில் உருண்டு விழுந்து, செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து கன்டெய்னர் லாரி டிரைவரான தூத்துக்குடி முத்துக்குமாரை (38) கைது செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சிகிச்சைபெற்று வரும் இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
The post திருச்செந்தூர் சென்று திரும்பியபோது கார் மீது கன்டெய்னர் லாரி மோதி 3 பேர் பலி: குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.