தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், வருகின்ற 07.07.2025 அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. நன்னீராட்டு பெருவிழாவிற்கு 8000 சதுர அடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
வேள்விச்சாலை வழிபாடு நாட்களில், வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். மேலும், காலை 07.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.