சிவகாசி: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் துருப்பிடித்து வீணாகி வரும் வாகனங்களை ஏலம் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி அருகே திருத்தங்கல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் விதமாக செங்கமலநாச்சியார்புரம் சாலையில் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசன் இயங்கி வருகின்றது. விபத்தில் சிக்கும் வாகனங்கள், திருட்டு வாகனங்கள், அடையாளம் தெரியாத வாகனங்கள் என பல்வேறு வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் போதிய பாதுகாப்பு இன்றி நிறுத்தப்பட்டுள்ளதால் வெயில், மழையில் நனைந்து துருப்பிடித்து காணப்படுகிறது. இதனால் யாருக்கும் பயனில்லாமல் போகிறது.
வாகனங்களை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் வாகன உரிமையாளர்கள் போலீஸ் ஸ்டேசன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எடுத்து செல்வதை தவிர்த்து விடுகின்றனர். போலீஸ் ஸ்டேசன்களில் நிறுத்தப்பட்டுள்ள சேதமடைந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் உத்தரவு பெற்ற பிறகு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அவ்வாறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் போலீஸ் ஸ்டேசன்களில் வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. போலீஸ் ஸ்டேசன்களில் துருப்பிடித்து வீணாகி வரும் வாகனங்களை ஏலம்விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்: ஏலம்விட கோரிக்கை appeared first on Dinakaran.