திருத்தணி: திருத்தணி அருகே தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்தபோது தெரு நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் உயிரிழந்தது. வனவிலங்குகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி அருகே காப்புக்காடு வனப்பகுதியில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயில் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு மான்கள் மற்றும் பிற விலங்குகள் வருகின்றன. இந்த விலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. மேலும் தெரு நாய்கள் கடித்து குதறி இறந்துவிடும் சம்பவமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருத்தணி நகராட்சி புதூர் அருந்ததி காலனி பகுதியில் நேற்று இரவு தண்ணீரை தேடி வந்த புள்ளி மானை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் விரட்டி சென்று கடித்து குதறியதில் புள்ளிமான் இறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், இறந்து கிடந்த புள்ளிமானை கைப்பற்றி பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கோடை வெயிலுக்கு தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் மான்கள் மற்றும் பிற வனவிலங்குகள் உயிரிழந்து வருவதை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருத்தணி அருகே தண்ணீர் தேடி வந்தபோது தெரு நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் சாவு appeared first on Dinakaran.