சென்னை: திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயருக்கு பதிலாக, திருத்தணி நகராட்சி நிர்வாகம் வேறு பெயர் மாற்றம் செய்வதற்கு முயற்சிப்பது ஏன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மா.பொ.சி சாலையில் காமராஜர் காய்கறி மார்க்கெட் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் பழுதடைந்த காரணத்தால் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள இந்த மார்க்கெட்டை புனரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக நவீன முறையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு பணிகள் தற்போது முடிவடைந்தன.