திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்று மலைப்பாதை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சரவணப்பொய்கை திருக்குளத்தில் இருந்து படிகள் வழியாகவும், மலைப்பாதையில் வாகனங்களில் மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஆடி கிருத்திகை, தைப்பூசம், ஆடிப்பூரம், கிருத்திகை, கந்தசஷ்டி உட்பட முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மலைக்கு செல்லும் பாதையில் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாற்று மலைப்பாதை அமைக்கவேண்டும் என பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்திருந்தனர். மலை கோயிலுக்கு பின்புறத்தில் சித்தூர்-திருத்தணி மாநில நெடுஞ்சாலை (54) இணைக்கும் வகையில் வருவாய் துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பூர்வாங்க பணி தொடங்கி மாற்று மலைப்பாதை திட்டம் செயல் படுத்துவதற்கான திட்ட அறிக்கை நெடுஞ்சாலைத்துறை சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலை கோயிலுக்கு மாற்று மலைப்பாதை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இன்று காலை மலைக்கோயிலில் படாசெட்டிகுளம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் வரைபடம் மூலம் அமைச்சர்களுக்கு விளக்கமளித்தனர்.
மலைப்பாதை மாற்று திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்றும், திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய வசதி மேம்படுத்த முடியும் எனவும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். ஆய்வின்போது, திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.தரன், நெடுஞ்சாலைத்துறை எஸ்ஓடி.சந்திரசேகர், திருத்தணி கோயில் இணை ஆணையர் ரமணி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், கோட்ட பொறியாளர் சிற்றரசு, திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்று மலைப்பாதை திட்டம் குறித்து அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.