புதுடெல்லி: நாடு முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திருநங்கைகளுக்கான 18 இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 3, மேற்கு வங்கத்தில் 2 இல்லங்களும் மற்ற மாநிலங்களில் 1 இல்லங்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 429 திருநங்கைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் ஓர் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பி.எல்.வர்மா பதிலளித்துள்ளார்.
மக்களவையில் தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, திருநங்கைகளுக்கான மத்திய அரசின் இல்லங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் பி.எல்.வர்மா அளித்த பதிலின் விவரம்: ‘கரிமா கிரஹ்’ என்ற இல்லங்கள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ‘திருநங்கைகளின் நலனுக்கான விரிவான மறுவாழ்வுக்கான மத்திய துறை திட்டம்’ என்ற துணைத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன.