திருநெல்வேலி: “இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழகம் இருந்தால் போதுமா? அரசு வெளியிடுகிற நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் பெயர் இருக்க வேண்டாமா? தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க மட்டும் தமிழகத்துக்கு வந்தால் போதுமென்று நினைக்கிறார்களா? இப்படி நாம் கேட்கிற கேள்விகளுக்கு பாஜக-விடமிருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலகளவில் பேமஸ். ஆனால், இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட பேமஸாக இருக்கிறது.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருநெல்வேலியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.