திருவனந்தபுரம்: சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் விளையாட்டை கைவிட்டு, மக்களுக்கு உதவும் வகையில் வக்பு மசோதாவை ஆதரிக்குமாறு கேரள எம்பிக்களுக்கு அம்மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜிவ் சந்திரசேகர், "வக்பு (திருத்த) மசோதா விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலும் பல கிறிஸ்தவ அமைப்புகளும் கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றன. ஏனெனில் கேரளாவில், கொச்சிக்கு அருகிலுள்ள முனம்பம் என்ற இடத்தில், நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தங்கள் நிலத்தை வக்பு கைப்பற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.