ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை பல்வேறு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனம், அங்கபிரதட்சனம் உள்ளிட்டவைகளில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்வது தொடர்பான விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆர்ஜித சேவை டிக்கெட்களை குலுக்கல் முறையில் பெற இன்று 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிருஷ்டவசமாக டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரும் 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி அதற்கான டிக்கெட்களை தங்களது செல்போன் வாயிலாகவே பெற்றுக்கொள்ளலாம். இம்மாதம் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஜூன் மாத திருக்கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.