மதுரை: திருப்பரங்குன்றம் வழிபாட்டுத் தலம் தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ம் தேதி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் மலைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்கா குறித்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர்கள் வீராகதிரவன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டினர். அதுமட்டுமின்றி மனுதாரர் கோரிக்கை குறித்து ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்ட தீர்வு காணப்பட்டது என கூறி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்; திருப்பரங்குன்றத்தில் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டைபோட வைத்துவிடுவீர்கள் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏன் இதுபோன்று வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், வழிபாட்டுத் தலங்கள் குறித்த வழக்கை ஐகோர்ட் விசாரிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் வழிபட்டுத் தலம் தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
The post திருப்பரங்குன்றத்தில் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டைபோட வைத்துவிடுவீர்கள் போல?: ஐகோர்ட் கிளை காட்டம்!! appeared first on Dinakaran.