திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மகா தீபம் டிச.13ல் ஏற்றப்படுகிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் முதல்படை வீடாக அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதுபோல், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று துவங்கிய விழா டிச.13ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் டிச.12ம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. பட்டாபிஷேகத்தை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றுதல் டிச.13ல் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் மேல்தளத்தில் உள்ள தீப மண்டபத்தில் மூன்றரை அடி உயரம், 160 லிட்டர் கொள்ளளவு கொண்ட தாமிர கொப்பரையில் 160 லிட்டர் நெய், 110 மீட்டர் நீளமுள்ள காடா துணியில் 5 கிலோ சூடம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை தொடர்ந்து இப்பகுதியிலுள்ள சுற்று வட்டார கிராமங்களில் வீடுகள் தோறும் தீபம் ஏற்றப்படும்.
The post திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.