மதுரை: அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள். திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அறநிலையத்துறைக்கான உரிமை என்ன, சிக்கந்தர் தர்காவுக்கான உரிமை என்ன என்பது குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பு வழங்கி உறுதிப்படுத்தியுள்ளன.