மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டிய லீலையை நடத்த அனுமதி கோரிய மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மீது கோயில் கண்காணி்ப்பாளர் அளித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன், போலீஸில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் கோயில் அலுவலகத்துக்கு பதிவு தபாலில் மனு அனுப்பியுள்ளார். தை அமாவாசை திதி நாளான ஜன.29ம் தேதி சிவபெருமான் பன்றிக் குட்டிகளுக்கு பால் ஊட்டிய லீலையை நடத்த திருப்பரங்குன்றம் மலைமீது அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.