மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மத நல்லிணக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் இன்று (பிப்.5) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்களுக்குள் எப்போதும் பிரிவினையே இல்லை" என்பது தான் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இந்து , இஸ்லாமிய மக்களின் கருத்தாக இருக்கிறது. முருகர் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா ஆகியவை அமைந்துள்ளன. இது நாள் வரை இரு மதத்தினருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் அங்கு இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் மிகவும் நெருக்கம் பாராட்டி தான் வாழ்ந்து வருகின்றனர். திருபரங்குன்ற மலையை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் இப்போதும் நீர்மோர் கொடுத்து உபசரித்துக் கொண்டிருக்கிறார்கள்.