திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சரத் குமார் 31, ராஜலிங்கம் 22, குர்ஜப்னீத் சிங் 13, முருகன் அஸ்வின் 13 ரன்கள் சேர்த்தனர்.
திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் ரகுபதி சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 121 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அமித் சாத்விக் 36 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், துஷார் ரஹேஜா 19 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் விளாசினர்.