சென்னை: திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக புதிய ஜவுளி பூங்காக்கள் ஒன்றிய அரசாவல் எப்போது திறக்கப்படும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் எம்.பி முடங்கி கிடக்கும் ஜவுளித் தொழிலை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் தயாரிப்பு தொழில்நுட்ப நெசவு மையங்கள் மற்றும் மினி ஜவுளிப் பூங்காக்களை அமைக்க பொருத்தமான இடங்களை தேர்வு செய்ய, எந்தக் குறிப்பிட்ட அளவுகோல்கள் பயன்படுத்தப்படுறது, இவ்வாறு அமைக்கப்படும் ஜவுளிப் பூங்காக்கள் மற்றும் மையங்கள், தேசிய தொழில்நுட்ப நெசவு இயக்கத்தின் இலக்குகளுடன் ஒருங்கிணைக்க திட்டம் ஏதேனும் உள்ளதா? ரூ.1,400 கோடி தேசிய தொழில்நுட்ப நெசவு இயக்க நிதியிலிருந்து தமிழ்நாட்டில் புதிய நெசவு மையங்களை உருவாக்க எந்த அளவு நிதி ஒதுக்கப்படும், மேலும் தனியார் முதலீட்டாளர்களை ஈர்க்க கூடுதல் நிதி அல்லது ஊக்கத்தொகை ஏதேனும் வழங்கப்படுமா?
கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய தொழில்நுட்ப நெசவு இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மற்றும் செலவழிக்கப்பட்ட நிதியின் விவரங்களை, மாநில வாரியான மற்றும் ஆண்டு வாரியான பட்டியலாக ஒன்றிய ஜவுளி அமைச்சகம் வழங்குமா எனக் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் ஜவுளி பூங்காக்களை ஆதரிக்க கட்டமைப்பு மேம்பாடு எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது, போக்குவரத்து, மின் விநியோகம் மற்றும் குடிநீர் வசதிகள் அடங்கிய மேம்பாட்டுத் திட்டங்கள் என்ன? இந்த புதிய ஜவுளி பூங்காக்கள், தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற நெசவு நகரங்களுடன் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.
The post திருப்பூர், கரூர் மற்றும் ஈரோட்டில் புதிய ஜவுளிப் பூங்காக்கள் எப்போது திறக்கப்படும்: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.