சென்னை: ஸ்டாலினின் மக்கள் விரோத திமுக அரசையும், திருப்பூர் மாநகராட்சியின் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திருப்பூர் மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் டிசம்பர் 3-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண உயர்வு, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு, பலமடங்கு தொழில் வரி உயர்வு, வணிக நிறுவனங்களிடம் வசூலிக்கும் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற பல்வேறு வரி மற்றும் கட்டணச் சுமைகளை திரும்பப் பெறுவதற்காக திருப்பூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், கழகக் கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்; வரி உயர்வை அறிவித்த மக்கள் விரோத ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெற உள்ளது.