சென்னை: திருப்போரூர் தொகுதி கோவளத்தில் தீயணைப்பு-மீட்புப்பணிகள் நிலையம் இன்று முதல் இயங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். திருப்போரூர் தொகுதி விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்போரூர் தொகுதி கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு படகு குழாம், கோவளம் நீலக் கடற்கரை, திருவிடந்தை திருக்கோயில் ஆகியவை அமைந்துள்ளதாலும், பல கடற்கரை விடுதிகள் உள்ளதாலும் மக்கள் பெருமளவு கூடும் சூழலும் இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அத்தகைய தருணங்களில் உடனடியான உரிய நடவடிக்கை மேற்கொள்ள இங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இது என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் 2024-25 காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சின் சார்பில் பேசிய சட்டமன்ற குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன் மூலமாக கோவளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் வேண்டி கோரிக்கையை முன் வைத்தேன்.
இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை தனது பதிலுரையில் 29.6.2024 அன்று வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கோவளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் அமைக்க நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ஆவன செய்யப்பட்டு வரும் நிலையில் தேவைக்கருதி உடனடியாக 21ம் தேதி (இன்று) முதல் இந்த நிலையம் தற்காலிக கட்டிடம் ஒன்றில் இயக்கிட அரசு முன் வந்துள்ளது.
இது மக்களுக்கும், இதற்காக மக்கள் சார்பில் கோரிக்கையினை முன் வைத்த எனக்கும் பெருமகிழ்ச்சியாகும். திருப்போரூர் தொகுதியை உள்ளடக்கிய செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக அமைச்சர் என்கிற வகையில் தா.மோ.அன்பரசனுக்கும் இந்த நிலையத்தின் இயக்கத்தை துவக்கிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனது உடல்நிலை இடம் தரவில்லை.
என்றாலும் விரைவில் இந்த நிலையத்திற்கான நிரந்தர கட்டிடத்தை கட்டி இதன் முழுமையான நிறைவான செயல்பாட்டை துவக்க உரிய முயற்சிகளை மேற்கொண்டு அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்பது உறுதி. அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நம் நன்றியினை காணிக்கையாக்கிட பணிவோடு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திருப்போரூர் தொகுதி கோவளத்தில் தீயணைப்பு-மீட்புப்பணிகள் நிலையம் இன்று முதல் செயல்பட உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாலாஜி எம்எல்ஏ நன்றி appeared first on Dinakaran.