திருமங்கலம்: திருமங்கலம் அருகே, அந்தியோதயா ரயில் இன்ஜின் பழுதாகி நின்றதால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு 11.30 மணியளவில் அந்தியோதியா ரயில் புறப்பட்டு வந்தது. விழுப்புரம், திருச்சி வழியாக இன்று காலை மதுரை வந்த ரயில் அங்கிருந்து 8.15 மணிக்கு திருமங்கலம் நோக்கி புறப்பட்டு வந்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பிரேக் ஆக்ஸில் திடீரென பழுது ஏற்பட்டு, இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், ரயிலை மெதுவாக இயக்கி 8.55க்கு திருமங்கலம் கொண்டு வந்து 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தினார். இதையடுத்து பழுதை சரிசெய்ய தொழில்நுட்ப குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ஒன்றரை மணிநேரம் போராடியும் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய நகரங்களுக்கு செல்லும் பயணிகள், ரயிலில் இருந்து இறங்கி பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அதேசமயம், திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 10.15 மணிக்கு திருமங்கலம் வந்தது. இந்த ரயிலுக்கு திருமங்கலத்தில் நிறுத்தம் கிடையாது. இருப்பினும், இந்த ரயில் திருமங்கலத்தில் நிறுத்தப்பட்டு நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி செல்லும் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post திருமங்கலத்தில் இன்ஜின் பழுதாகி நின்ற அந்தியோதயா ரயில்: பயணிகள் கடும் அவதி: மாற்று ரயிலில் சென்றனர் appeared first on Dinakaran.