திருவெண்ணெய்நல்லூர்: திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி, ‘முடிந்தால் உயிர் பிழைத்துக்கொள்’ என வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கீரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஜெயசூர்யா (25). இவர் ஆந்திராவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார். அதே கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் மகள் ரம்யா (19), தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஜெயசூர்யா, ரம்யாவுக்கு அண்ணன் முறை வருவதால் இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாக தெரிகிறது. இதையடுத்து ரம்யாவிடம் சில தினங்களாக ஜெயசூர்யா பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் 2ம் தேதி ரம்யா டீயில் எலி மருந்து கலந்து ஜெயசூர்யாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஜெயசூர்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜெயசூர்யாவின் செல்போனுக்கு, ‘உன் உடம்பை பார்த்துக் கொள், முடிந்தால் உயிர் பிழைத்துக்கொள்…’ என்று ரம்யா மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்த மெசேஜ் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமணம் செய்ய மறுத்ததால் டீயில் எலி மருந்து கலந்து காதலனுக்கு கொடுத்த காதலி: ‘முடிந்தால் உயிர் பிழைத்துக்கொள்’ என வாட்ஸ்அப்பில் மெசேஜ் appeared first on Dinakaran.