சூலூர்: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் வீட்டு முன் நியாயம் கேட்டு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே உள்ள பூராண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியராக ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவரது இளைய மகன் பரணிகுமார் (30). இவர், கோவையில் படித்துக் கொண்டிருந்தபோது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல், ராமமூர்த்தி குடும்பத்துக்கு தெரியும் என கூறப்படுகிறது. மேலும் ரேணுகாதேவியை (30) திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த பரணிகுமார், பலமுறை ரேணுகாதேவியை வீட்டுக்கு அழைத்து வந்து சகஜமாக பழகி உள்ளார். இந்த நிலையில் படிப்பை முடித்த பரணிகுமார் மற்றும் ரேணுகாதேவி ஆகியோர் சென்னையில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போதும் இவர்களது காதல் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறி பரணிகுமார் ரேணுகாதேவியை அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் ரேணுகாதேவி கர்ப்பமானார். திருமணத்துக்கு முன் கர்ப்பமானால் என் வீட்டில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என கூறி கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இதற்கிடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன் பரணிகுமார், பணி மாறுதலாகி பெங்களூர் சென்று விட்டார். இருப்பினும் பரணிகுமார் பெங்களூருவில் இருந்து சென்னை வந்து ரேணுகாதேவியை சந்தித்து உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் பரணிகுமாருக்கு அவர்களது உறவினர் பெண் ஒருவரை நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதை ரேணுகாதேவிக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்ட பரணிக்குமார், வழக்கம் சென்னை சென்று ரேணுகாதேவியிடம் சகஜமாக பழகியதுடன், அவருடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். அப்போது எதேச்சையாக பரணிகுமாரின் செல்போனில் இருந்த அவரது திருமண போட்டோவை பார்த்து ரேணுகாதேவி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ரேணுகாதேவி கேட்டபோது தனக்கு திருமணம் ஆனதை ஒப்புக்கொண்ட பரணிகுமார், நீ வேண்டுமானால் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேணுகாதேவி, காதலன் பரணிகுமாரை திட்டி நியாயம் கேட்டு அழுதுள்ளார். இதற்கிடையே வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற பரணிகுமார் பெங்களூரூ சென்று விட்டார். ரேணுகாதேவி தொடர்ந்து 2 மாதங்களாக பரணிகுமாரை தொடர்பு கொண்டும் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவை வந்த ரேணுகாதேவி, பரணிகுமார் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டு வீட்டின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது எனது மகனுக்கு திருமணம் செய்து விட்டோம், இனிமேல் நீ இங்கு வரவேண்டாம், வேறு யாரையாவது பார்த்து திருமணம் செய்து கொண்டு ஊருக்கு சென்று விடு என ராமமூர்த்தி குடும்பத்தினர் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகாதேவி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவரை வீட்டில் இருந்து வெளியே தள்ளி ராமமூர்த்தி குடும்பத்தினர் கேட் கதவை சாத்திக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகாதேவி, எப்படியும் பரணிகுமாரை சந்தித்து நியாயம் கேட்க வேண்டும் என கருதி 2 நாட்களாக பரணிகுமார் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள பரணிகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் நேற்று கோவை வந்த அவர் ரேணுகாதேவியிடம் சமாதானம் பேசினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் இதுகுறித்து ரேணுகாதேவி சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். பின்னர் அவர்களை சூலூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்து தீர்வு காணுமாறு அனுப்பி வைத்தனர். இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து விட்டு உறவினர் பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியது.
The post திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம்; காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா: கோவை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.