திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். திருவணணாமலையில் பெஞ்சல் புயல் மழையால் தீபமலை அடிவாரம் வஉசி நகர் 11வது தெருவில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயரிழந்தனர். பல வீடுகள் இடிந்து சேதமடைந்தது. வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் பகுதியில் 20 குடும்பங்களுக்கான தற்காலிக குடியிருப்பு, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அறக்கட்டளை சார்பில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கட்டப்பட்டது.
அதனை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்து, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் வீட்டு சாவியை ஒப்படைத்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், முதல்வரின் உத்தரவுபடி, பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக வாடகை வீடுகளில் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டது. தற்போது நல்லவன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இந்த இடத்தை கலெக்டர் மூலம் தேர்வு செய்து, தற்காலிகமாக 20 வீடுகள் அமைக்கப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
The post திருவண்ணாமலையில் மண் சரிவில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தற்காலிக வீடு: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார் appeared first on Dinakaran.