சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (11.12.2024) ஆணையர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு, அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு பெரியாண்டவருக்கு உபயதாரரால் 12 கிலோ கிராம் வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளிக் கவசத்தை திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
பின்னர், அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பின், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு அதிகளவில் உபயதாரர்கள் முன்வந்து நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு, அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலிலுள்ள அருள்மிகு பெரியாண்டவருக்கு 12 கிலோ வெள்ளி கவசத்தை ஆர். ஆனந்தகுமார் என்ற உபயதாரர் வழங்கியுள்ளார். இதேபோல் பாரிமுனை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்திட 210 கிலோ வெள்ளியையும், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்திட 100 கிலோ வெள்ளியையும் உபயதாரர்கள் வழங்கியிருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வைர கிரீடம் உபயதாரர்களால் வழங்கப்பட இருக்கின்றது. இப்படி இந்த ஆட்சி பொறுப்பேற்றபின், உபயதாரர்கள் மட்டும் ரூ.1,185 கோடியினை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். இதன்மூலம் 9,491 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இதுவரை 2.350 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, ரூ.6,967 கோடி மதிப்பிலான 7,176 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்திடும் வகையில் தனி வட்டாட்சியர்கள், நில அளவையர்கள் நியமனம் செய்யப்பட்டு 36 ரோவர் கருவிகளின் மூலம் 1,78,178 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், மாநில குழுவால் 10,889 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற பின் நிலுவையில் இருந்த வாடகை ரூ.900 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பலமாற்று பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டதன் மூலம் வட்டித் தொகையாக ரூ.5 கோடி 13 திருக்கோயில்களுக்கு கிடைக்கிறது. மேலும், பழனி, சமயபுரம் போன்ற 10 திருக்கோயில்களில் உள்ள சுமார் 700 கிலோ பலமாற்று பொன் இனங்கள் விரைவில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி முதலீடு செய்யப்படுவதின் மூலம் ரூ.10 கோடி வரை வட்டித்தொகை கிடைக்கும். மேலும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட சொத்துக்ளை பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியின் மீது தீபம் ஏற்றும் நிகழ்வு எவ்விதத்திலும் தடைப்படக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கின்றார். சமீபத்தில் பெய்த கனமழையின் காரணாமாக மலையில் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் சரவணவேல் ராஜ் உத்தரவின்படி, பேராசிரியர் கே.பிரேமலதா தலைமையிலான 8 நபர்களை கொண்ட குழுவினர் கடந்த டிசம்பர் 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் மலையில் களஆய்வு செய்தனர். அந்த ஆய்வறிக்கையின்படி 350 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் திரிகளையும், முதல்நாள் 40 டின்கள் மூலம் 600 கிலோ நெய்யும், பிற நாட்களில் தேவைக்கேற்ப தீபத்திற்கான நெய்யும், மலை உச்சிக்கு எடுத்து செல்ல தேவைப்படும் மனித சக்தி, காவல்துறை மற்றும் வனத்துறையினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் மலையின் மீது ஏற அனுமதி மறுக்கப்படுகிறது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிடுவார்.
இந்த ஆண்டு தீப திருவிழாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்றால்போல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் துணை முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நான்(அமைச்சர் சேகர்பாபு), தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் தலைமையில் 6 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கார்த்திகை தீப நாளான்று பொதுப்பணித்துறையின் மூலம் உறுதித் தன்மையை சரிபார்த்து அளிக்கப்பட்ட சான்றின் அடிப்படையில் திருவண்ணாமலை திருக்கோயிலில் பரணி தீபத்திற்கு ஆன்லைனில் விண்ணபித்த 500 பக்தர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள், அரசு துறை அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் என 6,500 நபர்களும், அதேபோல மாலையில் திருக்கோயில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்த பக்தர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள், அரசு துறை அலுவலர்கள், ஊடகவியலாளர்கள், காவல் துறையினர் 1,000 நபர்கள் என 11,600 நபர்களும் அனுமதிக்கப்படுவர். இந்த முறை சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. திருக்கோயிலில் 6 இடங்களில் QR கோடுடன் கூடிய நுழைவாயில்கள் அமைக்கப்படுகிறது. இப்படி அனைத்து வகையிலும் பரணி தீபத்தையும், மகா தீபத்தையும் சிறப்போடு நடத்துவதற்கு பல்வேறு வகையில் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., ந.திருமகள், இணை ஆணையர்கள் பொ.ஜெயராமன், கோ.செ. மங்கையர்கரசி, இரா.வான்மதி, எம்.அன்புமணி, வெள்ளி நன்கொடையாளர் ஆர்.ஆனந்தகுமார், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: மலைமீது தீபம் ஏற்ற கொப்பரை, திரி, நெய் ஆகியவற்றை எடுத்து செல்ல தேவைப்படும் மனித சக்தி மட்டுமே அனுமதிக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.