நாகர்கோவில்: நாகர்கோவிலில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கவர்னராக இருந்தாலும், யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். தொடர்ந்து கவர்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தமிழக சட்டமன்றத்தில் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி கொடுக்கும் தீர்மானங்களுக்கு எல்லாம் அவர் ஒப்புதல் வழங்குவதில்லை.
பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தோம் என்றால் அதற்கு ஒப்புதல் வழங்க மறுக்கிறார். வேண்டுமென்றே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். இது ஒரு மோசமான முன்னுதாரணம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. யார் சொன்னாலும் அவருக்கு உறைப்பதில்லை. ஒரு படித்த ஐபிஎஸ் அதிகாரி இப்படி செய்யலாமா? தான் வகித்த பதவிக்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் விரோதமாக நடந்து கொண்டிருக்கிறார்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. ஆனால், இவர் இந்தியா மதம் சார்ந்த நாடு என்று கூறுகிறார். கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை புகுத்த வேண்டும் என்று எல்லா இடத்திலும் பேசி வருகிறார். இதற்கெல்லாம் நல்ல முடிவு உச்சநீதிமன்றத்தால் வரும். திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசுவது கவர்னர் செய்யும் சிறுபிள்ளைத்தனங்களில் ஒன்றாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post திருவள்ளுவருக்கு காவி சாயம் கவர்னரின் சிறுபிள்ளைத்தனம்: சபாநாயகர் அப்பாவு கண்டனம் appeared first on Dinakaran.