* 2 பேர் தீக்குளிக்க முயற்சி
* போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயிலை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் 1979ம் ஆண்டு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தன கோபால கிருஷ்ண ஸ்ரீ சந்தான விநாயகர் கோயில் கட்டப்பட்டது. இந்த பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை இடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அரசு இடத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலை இடித்து அகற்ற வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் போலீசார் கடந்த நவம்பர் மாதம் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்போது கோயிலை இடிக்கும் பணியை வருவாய்த் துறையினர் கைவிட்டனர். இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கிருஷ்ணர் கோயிலை இடித்து அகற்ற வேண்டும் என மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் புல்லரம்பாக்கம் பகுதியில் இருந்த கிருஷ்ணர் கோயிலை இடித்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புல்லரம்பாக்கம் கிருஷ்ணர் கோயில் பகுதியில் கலெக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மேற்பார்வையில் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில், வருவாய்த் துறையினர் கோயிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி மற்றும் விநாயகர் சிலைகளை அகற்றினர். அப்போது மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட சிலைகளை அரசு வாகனத்தில் ஏற்றி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர். சிலைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புல்லரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி முதலே போலீஸ் எஸ்பி உத்தரவின் பேரில் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச்செல்வன், அந்தோணி ஸ்டாலின் உள்பட 100க்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கலெக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மேற்பார்வையில் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில், வருவாய்த் துறையினர் கோயிலை இடித்து அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. எனவே பதற்றத்தை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிலைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புல்லரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
The post திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கிருஷ்ணர் கோயில் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.