திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் ரூ.36 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பிலான தரச்சான்று அளிக்கப்படாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் பிஐஎஸ் சட்டம் 2016 மீறப்படுவதாக இந்திய தரநிர்ணய அமைவனத்துக்கு (பிஐஎஸ்) சமீபத்தில் புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், இந்திய தரநிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் இரு குழுக்களாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் செல்லர் சர்வீஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், பொன்னேரி அருகே துரை நல்லூர் கிராமத்தில் உள்ள அமேசான் செல்லர் சர்வீஸ் கிடங்கில் பிஐஎஸ் சென்னை கிளை இணை இயக்குநர்கள் கவுத்தம் பி.ஜே. தினேஷ் ராஜகோபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.