திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் உள்ள தெருக்களில் குப்பைகளை அகற்றுவது கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சீர் செய்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலானோர் முககவசம், கையுறை, பூட்ஸ் அணிவதில்லை. இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு ராஜவீதி மாவட்ட சுகாதார அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் முககவசம், கையுறை, பூட்ஸ் அணியாமல் வேலை பார்த்தனர்.
இதனால் இவர்களுக்கு நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதில்லை. எனவே தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மை பணியில் ஈடுபடுவதை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரி கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முககவசம் மற்றும் தேவைப்படும் பணியாளர்களுக்கு பூட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணிபுரிய இடையூறாக இருப்பதால் அணிய மறுக்கின்றனர்’ என்றார்.
The post திருவள்ளூர் நகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் appeared first on Dinakaran.