திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி-ஆத்திப்பட்டு ரயில்வே கேட், கடலூர்- சித்தூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டதால் நிரந்தரமாக மூடப்பட்டது. தடை செய்யப்பட்ட இந்த ரயில்வே கேட்டின் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சக்தி (35) என்பவர் வைக்கோல் ஏற்றுவதற்காக நேற்று டிராக்டரில் டிரெய்லருடன் கடந்தபோது, தண்டவாளத்தில் டிரெய்லர் சிக்கியது. அப்போது நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், டிராக்டர் டிரெய்லர் மீது மோதியதில், டிரெய்லர் தூக்கி வீசப்பட்டது. ரயில் வருவதை பார்த்ததும் டிராக்டர் டிரைவர் இறங்கி ஓடி தப்பித்தார்.
தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பொறியாளர்கள் வந்து ரயிலை பரிசோதித்த பிறகு, ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் 1.15 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் ஓட்டுந ரின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. இந்த விபத்து காரணமாக சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்களும், திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பின்னர் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் டிராக்டரை ஓட்டி வந்த சக்தியை விருத்தாசலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
The post திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு டிராக்டர் மீது ரயில் மோதல்: 1.15 மணி நேரம் ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.