திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோயில் அருகே தேங்காய், பழக்கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் அதிகளவில் உள்ளன. இக்கோயிலில் அரசு அறிவித்துள்ள அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளியூர் பக்தர்கள் கோயில் பிரகாரம், மண்டபம் பகுதிகளில் இரவில் தங்கியிருந்து காலையில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இவர்கள் உணவருந்திவிட்டு போடும் குப்பைகள் மற்றும் அன்னதான கழிவு இலைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வந்தன. ஆனால், தற்போது கோயிலில் தூய்மை பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறைந்த பணியாளர்களை கொண்டு கையால் இழுக்கும் வண்டி மூலம் குப்பைகளை சேகரித்து சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு அப்பால் கொட்டி வந்தனர். தற்போது அந்த பணியும் சரிவர நடைபெறவில்லை. கோயிலில் சேரும் குப்பைகளை அருகிலேயே தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். இதனால் குப்பைகளும் அதிகம் குவிகிறது. இதற்கேற்ப தேவையான பேட்டரி வாகனம் அல்லது மினி டிராக்டர் வாங்கி குப்பைகளை அகற்ற கோயில் நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தூய்மை பணியாளர்களை போதிய அளவில் நியமிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவெற்றியூரில் கோயில் அருகே எரிக்கப்படும் குப்பையால் பக்தர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.