திருவொற்றியூர்: கடல் வாழ் ஆமைகளில் அரியவகை உயிரினமான, ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இனபெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளை நோக்கி வரும். இவ்வாறு வரக்கூடிய ஆமைகள் கடலில் மீன்பிடி படகு, இஞ்சின் மற்றும் வலைகளில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகிறது. இதனால் கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. கடந்த மாதம் காசிமேடு, திருவொற்றியூர் மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் அதிகளவிலான ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை எண்ணுார், தாழங்குப்பம், நெட்டுகுப்பம் உள்ளிட்ட கடற்கரைகளில் 30க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து, தடுப்பு கற்கள், துாண்டில் வளைவு கற்களில் ஒதுங்கி கிடக்கின்றன. சில ஆமைகள் இறந்து ஒதுங்கி பலநாட்களாகியிருப்பதால், அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசுகின்றன. இதனால், அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக திடீரென நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “கடலில் ஏற்பட்ட நீரோட்டம் மாற்றம் காரணமாக, இந்த ஆமைகள் ஆந்திர கடல் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக கடலில் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆமைகள் ஓரிரு நாட்களுக்குள் இறந்ததாகத் தெரியவில்லை. பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,’’ என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “இறந்த ஆமைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்’’ என்றனர்.
ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் கூறும்போது, “இந்த ஆமைகள் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிட வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திரா, ஒடிசா மாநில கடலோர பகுதிக்கு பயணிக்கின்றன. தமிழ்நாடு மின்பிடி ஒழுங்குமுறை சட்டப்படி, கடற்கரையில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் வரை விசைப்படகுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீறி மீன் பிடிக்கப்படுகிறது. ஆமைகள் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை கடல் நீரின் மேல் பகுதிக்கு வந்து சுவாசித்துவிட்டு மீண்டும் நீருக்குள் சென்றுவிடும். ஆனால் ஆமைகளின் வழித்தடத்தில், விதிகளை மீறி மீனவர்கள் மீன் பிடிக்கும்போது, வலையில் சிக்கி அவை உயிரிழக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த ஆமைகள் மூச்சுத் திணறி உயிரிழக்க நேர்ந்தால் கண்கள் பிதுங்கியும், கழுத்து வீங்கியும் இருக்கும். பிரேதப் பரிசோதனை இல்லாமலேயே இதை தெரிந்துகொள்ளலாம். தற்போது உயிரிழந்து கரை ஒதுங்கும் ஆமைகளிடம் இதைப் பார்க்க முடிகிறது. நாங்கள் சேவையாற்றி வரும் நீலாங்கரை முதல் கோவளம் வரை 183 ஆமைகளும், செம்மஞ்சேரி முதல் ஆலம்பரை வரை 133 ஆமைகளும் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. தற்போது, வடசென்னையிலும் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்,’’ என்றனர்.
The post திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: துர்நாற்றத்தால் மீனவர்கள் அவதி appeared first on Dinakaran.