இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அகால மரணமடைந்த துயர சம்பவம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிராஜா புகழ்பெற்ற இயக்குநர் என்பதாலும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பெற்றவர் என்பதாலும், அவரது மகன் மனோஜும் துடிப்பான நடிகராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பெற்றவர் என்பதாலும், இந்த துயர சம்பவம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள தமிழ் மக்கள் ஊடகங்களை பார்த்தபடி இருந்தனர். இதுகுறித்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உண்டு என்ற அடிப்படையில், அனைத்து ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன.
ஆனால், செய்தி ஊடகங்களுக்கு எதிராக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் டி.ஜி.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. ‘‘ஒருவரின் அழுகையை, துயரத்தை ஏன் வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? மற்றொருவரின் மரணத்தை, இயலாமையை கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டோமா?’’ என்றெல்லாம் கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.