அரசியல் குடும்ப பின்னணியோ, சிறு வயது முதல் அரசியல் வாசனையோ அறியாத ஜெயலலிதா தான், பின்னாளில் மாநிலத்தை ஆளும் முதல்வரானார். 1948-ம் ஆண்டு பிப்.24-ம் தேதி கர்நாடக மாநிலம், மாண்டியாவில் பிறந்த அவர், 1964-ம் ஆண்டு சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்து உயர்கல்வி பயில உதவித்தொகை கிடைத்தும், திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1961-ல் தனது திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பின், 1965-ல் தரின் ‘வெண்ணிற ஆடை' எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்று முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். 1982-ல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.