சென்னையில் வசிக்கும் ஷ்ரேயா (நித்யா மேனன்), ஆண் துணையில்லாமல், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார். பெங்களூருவில் வசிக்கும் சித்தார்த் (ரவி மோகன்) நிச்சயதார்த்தம் அன்று விரும்பிய பெண் வராமல் போனதால் திருமணம், குழந்தை என்றாலே வெறுப்புடன் இருக்கிறார். வெவ்வேறு ஊரிலிருந்தாலும் இருவரும் நண்பர்களாகிறார்கள். முரண்பட்ட எண்ணங்களைக் கொண்ட இவர்கள் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பது கதை.
ஆண் துணையின்றி குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண், திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை தேவையில்லை என்று நினைக்கும் ஆண், அவருக்குப் பால் புதுமையினர் நண்பராக இருப்பது என இன்றைய 'இசட் ஜென்' தலைமுறையினரிடையே துளிர்விடும் கலாச் சாரத்தைக் கதைக் களமாக்கி, இயக்கி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. சிக்கலான கதைக் களம் என்றாலும் முடிந்தவரை சுவாரஸியமாகத் தர முயன்றிருக்கிறார். ஆனால், ஆங்காங்கே வெளிப்படும் ஆழமில்லாத காட்சிகளால் படம் தடுமாறுகிறது.