கண்ணெதிரே தனது குட்டியை கொன்றுவிட்டு விரையும் காரைத் துரத்திச் சென்று குற்றவாளியை அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறது, ஜான்சி என்கிற நாய். உதவி கேட்டுக் காவல் நிலையம் வரும் அதைத் துரத்தியடிக்கிறார்கள். பின்னர், தர்ம ராஜ் (எஸ்.ஏ.சந்திரசேகரன்) என்கிற வழக்கறிஞரைச் சந்திக்கிறது. அந்த நாயின் இழப்பையும் அதன் உணர்வையும் புரிந்துகொள்ளும் அவர், அதற்கு எவ்வாறு நீதி பெற்றுக்கொடுக்கிறார் என்பது கதை.
இப்படியொரு ஃபான்டசியான கதையை நம்பும்விதமாக எப்படிக் கொடுக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்தை மூன்றாவது காட்சியிலேயே துடைத்துப் போட்டு விடுகிறார் இயக்குநர். ஓய்வுபெற்ற நீதிபதியான ஓய்.ஜி.மகேந்திரன் தன்னிடம் வந்த மாறுபட்ட வழக்குப் பற்றிக் கூறும்போது: “ஒரு தாய், தனது குழந்தையைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்த எப்படிப் போராடினாள் என்பதுதான் அந்த வழக்கு” என்கிறார். அவரைப் பேட்டி காண்பவர், மனதில் ஒரு பெண்ணைக் கற்பனை செய்துகொண்டு கதையைக் கேட்கத் தொடங்குகிறார். ஆனால், அந்தத் தாய், ஒரு நாய்என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த இயக்குநர் கையாண்டிருக்கும் காட்சியமைப்புகள் ஜிலீர் ரகம்.