கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் நாயகன் சத்யாவுக்கு ('மெட்ரோ‘ சத்யா), கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. வாங்கும் சம்பளத்தில் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு கொஞ்சம் அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்கிறார். ஆனால் அவரின் நாகரிக மோகத்துக்கு, வாங்கும் சம்பளம் போதவில்லை. இதனால் ஒரு பக்கம் வேலை பார்த்துக்கொண்டே ஆளரவமற்ற இடங்களில், தனியாக வரும் பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அது அவரை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பது கதை.
நாளிதழ்களில் வரும் நகைப் பறிப்பு செய்திகளை வாசித்துவிட்டு 'யாருக்கோ' என்று எளிதில் கடந்து விடுகிறோம். இதுபோன்ற சம்பவங்களில் சில இளம் பெண்கள் உயிர்விடும் அதிர்ச்சியையும் அடுத்தடுத்த நாட்களில் மறந்து விடுகிறோம். ஆனால் நகைப்பறிப்புக்குப் பின் உள்ள 'திருட்டு' நெட்வொர்க், அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், அந்த நகைகளை என்ன செய்கிறார்கள் என்கிற குற்றத்தை, பரபர த்ரில்லாக தருகிறது, அறிமுக இயக்குநர் எஸ்.எம்.பாண்டி இயக்கி இருக்கும் இந்த 'ராபர்'.