தாயை இழந்துவிட்ட 14 வயது மகளின் கல்விக்காக சென்னையில் குடியேறுகிறார் கிராமத்து மனிதரான சரவணன் (பிரேம்ஜி). சுவரொட்டித் தொழிலாளியாக உழைத்து, மகளைக் கண்ணும் கருத்துமாகப் படிக்க வைக்கிறார். ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மகள், திடீர் உடல்நலக் குறைவுக்கு ஆளாக, பதறியடித்து மகளிர் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். பரிசோதனையில் அவளுக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துச் சொல்கிறார் மருத்துவர். இதைக் கேட்டுமனம் குமையும் மகளும் தந்தையும், பாலியல் குற்றவாளி யாரெனக் கண்டுபிடித்து பழிதீர்க்க முடிவெடுக்கிறார்கள். அவர்களால் அது முடிந்ததா என்பது கதை.
ஒண்டிக்குடித்தனத்தில் வாழ்ந்தாலும் மானத்துடன் வாழ வேண்டும் என நினைக்கும் சாமானிய மனிதர்களின் கோபத்துக்கு நியாயமும் வலிமையும் உண்டு என்கிற கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பழிவாங்கும் திரைக்கதை, தங்குதடையில்லாமல் பயணிக்கிறது. குற்றம் எப்போது, எந்தச் சூழ்நிலையில் நடந்தது, குற்றவாளி யார்என்பதைக் கண்டறியத் தந்தையும் மகளும் எடுக்கும் முயற்சிகள் எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் யதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. குற்றவாளி யார் என்பதைக் கண்டறிந்த பிறகு, அவரை நெருங்கும் காட்சிகளின் படமாக்கமும் கிளைமாக்ஸும் கொஞ்சம் பதற்றத்தைக் கொடுக்கின்றன.