சென்னை: முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு ஓராண்டு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நவ நாகரீக உலகில் வெளிநாட்டு உணவுப்பொருட்கள் தமிழகத்தில் ஒவ்வொரு தெருக்களிலும் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் அரேபிய வகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ, சவர்மா போன்றவை இளம் தலைமுறையினரை அதிகளவு கவர்ந்துள்ளது.வறுத்த கறி, பொரித்த சிப்ஸ்கள், பிரென்ச் பிரைஸ் உள்ளிட்டவைகளுக்கு தொட்டு கொள்ள மயோனைஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த மயோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில் கூறப்பட்டுள்ளது:தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால்,முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகம். உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மீறுபவர்கள் அபராதம், உரிமம் ரத்து செய்தல் அல்லது சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள். ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஒராண்டு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.உணவுப் பாதுகாப்புத் துறை மாநிலம் தழுவிய அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு, கடைப்பிடிக்க வேண்டும். மயோனைசை சார்ந்த பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படவும், பொருட்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
சமீபத்தில் கூட தெலங்கானா மாநிலத்தில் மயோனைசுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 15 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸை தடை செய்யுமாறு தெலங்கானா அரசுக்கு உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரைத்தது. இதனைத் தொடர்ந்து முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு ஓராண்டு காலம் தடை விதித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
The post தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.